Tuesday, October 12, 2010

தரங்கை பன்னீர்ச்செல்வனாரின் தமிழத்தேன் நூல் தொகுப்பையும் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் அறப்பால் உரை நூலையும் அமைச்சர் மாண்புமிகு உ.மதிவாணன் வெளியிடுகிறார். வலது ஓரத்தில் நூல் வெளியீட்டாளர் கவி (மயிலாடுதுறை 24.01.2010)

தரங்கை பன்னீர்ச்செல்வனாருக்கு அமைச்சர் பொன்னாடைப் போர்த்துகிறார்.

அமைச்சருக்குச் சிறப்புச் செய்கிறார் தரங்கையார்

ஆசிரியர் மன்றத் தலைவர் க.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தரங்கையாருக்குச் சிறப்புச் செய்கிறார்.

தரங்கையாருடன் ஒரு நேர்காணல்

தமிழ்ஓசை ‘களஞ்சியம்’ பகுதிக்காக தரங்கை பன்னீர்ச் செல்வன் அவர்களுடன் ஓர் நேர்க்காணல்.....
- கவி

கே: உங்கள் தொடக்கக்கால வாழ்க்கையைப் பற்றி...

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பிறந்ததால் தரங்கை பன்னீர்ச் செல்வம் என்றானேன். 17 ஆவது அகவையில் பள்ளி இறுதி வகுப்பை 1958 இல் முடித்துப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். ஆசிரியர் பள்ளியில் பயின்ற போது திரு. வில்லியம் பவுல்(கதை, நாடகம் எழுதுவதில் புகழ் பெற்றவர். இவரது நாடகம் ரங்கூனில் அரங்கேற்றப் பட்டது), வால்டர் மற்றும் மிருதையுள் செயன் (இவர் புலவர். பிற்காலத்தில் என் இலக்கண வடிவ பாடலுக்கு செம்மை வடிவம் கொடுத்தவர்).அனைவரும் என்னுடன் பயின்றவர்கள். எனது நண்பர்கள். இவர்கள் அனைவரும் 40 அகவை முடித்தவர்கள்.
தொடக்கக் காலங்களில் நான்கு வரிகளில் மண்டிலப்பா (விருத்தப்பா) வரிசையில் எழுதத் தொடங்கினேன்.

கே: உங்களுடைய தனித்தமிழ் ஆர்வம், பெருஞ்சித்திரனார் மற்றும் பாவாணர் ஆகியோருடன் ஏற்பட்ட ஈடுபாடு குறித்து...

எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தீபாவளிக்குப் புது வேட்டி கட்ட மாட்டேன். இது என்னுள் ஏற்பட்ட இயற்கையான இயல்பான வாழ்வியல் உந்தல்.
9,10,11 ஆம் வகுப்புகளில் தமிழ் கற்பித்த ஆசிரியர், புலவர் சொ. முத்தையனார் அவர்கள் என்னுடைய தமிழ் ஆர்வத்தை ஊக்கமூட்டினார்.
பண்ணுருட்டி அருகேயுள்e விசூர் என்னும் சிற்றூர் பள்ளியில் பணியாற்றிய போது கடலூரில் ‘தென்மொழி’ இதழை இயல்பாக ஏற்பட்ட உந்துதல் காரணமாக வாங்கினேன். அதிலிருந்து தொடர் வாசகனானேன். அப்பொழுது பாவலேறு பெருஞ்சித்திரனார் நெல்லிக்குப்பத்தில் அஞ்சல் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

நான் வாங்கிய முதல் சம்பளம் முதல் இன்று வரை என் சம்பeத்தில் ஒவ்வொரு திங்களும் ஒரு நூலாகிலும் வாங்கும் பழக்கம் கொண்டுள்ளேன். அப்படி முதல் சம்பeத்தில் புலியூர்க் கேசிகன் எழுதிய நாலடியார் நூலை வாங்கினேன். அதைப் படித்து, நாலடியாரின் ஆசிரியர் யார்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி தென்மொழிக்கு அனுப்பினேன். ‘இக்கட்டுரையாளர் , ஆசிரியர் ஒருவர் தான் என்கிறார். ஆய்க! ’என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் குறிப்புடன் தென்மொழியில் வெளி வந்தது. என் முதல் கட்டுரையும் அதுவே.
பறம்புக்குடியில் நடைபெற்ற ‘உலகத் தமிழ்க் கழக(உ.த.க.)’ முதல் மாநாட்டில் பெருஞ்சித்திரனார், பாவாணர், தமிழ்க் குடிமகனார் மற்றும் பறம்பை அறிவன் ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
‘தென்மொழி’ இதழும் பணியாeர்களும் ஒரு குடும்பமாகப் பணியாற்றினர். தென்மொழிக்கு ஏதாவது ‘பணவிடை’ வந்தால், அன்றுதான் பணியாளர்களுக்கு அரிசி வாங்கி உணவு அளிக்கப்படும். அந்த அளவிற்கு அவர்கள் தென்மொழிக் குடும்பத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.

புதுவை காரைக்கால் உ.த.க. முதல் மாநாட்டின்பொழுது தேவநேயபாவாணர் அவர்களுடன் ஒரு நாள் கூடவே இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் வினாக்களைத் தொடுக்க, தொடுக்க, பாவாணர் அவர்கள் தம் ஆய்வு அடிப்படையில் விடையளித்துக் கொண்டே யிருந்தார். மீண்டும் கேள்விகளைக் கேளுங்கள், கேளுங்கள் என்று ஆர்வத்துடன் ஊக்கப்டுத்திக்கொண்டே வந்தார். அந்தளவுக்கு மிகுந்த ஆழமான அறிவைக் கொண்டிருந்தார்.

கே: உங்களுடைய இலக்கிய, குமுகாயப் பணிகள் குறித்து...

பேராசிரியர் தி. மாணிக்க வாசகம் அவர்கள் தொடக்கி,ஆசிரியராக இருந்த தமிழ்நாடு நாளிதழ், அப்போது தனித்தமிழில் வெளிவந்தது. இப்பொழுது வெளிவரும் தமிழ்ஓசை இதழுக்கு முன்னோடி. தமிழ்நாடு இதழால் என் தமிழ் வளம் பெற்றது. சுதேசமித்திரன் இதழும் படிக்கும் வழக்கமுடையவன்.
ஆக்கூர் புலவர் தமிழ்ச்செல்வன் என்னும் என்னைப் போற்றி வளர்த்த அண்ணனும், நானும் ‘தரங்கை மறுமலர்ச்சி மன்றம்’ என்ற அமைப்பை 1966 இல் தரங்கம்பாடியில் ஏற்படுத்தினோம். நான் அதில் செயலாளராகச் செயலாற்றினேன்.
‘‘Tranquabar’ என்ற பெயரை ‘தரங்கம்பாடி’ என்று வழக்கத்தில் கொண்டு வர போராடினோம். ‘நாகப்பட்டிணம்’ என்று மூன்று சுழி ‘ண’ போட்டு எழுதும் வழக்கம் இருந்து வந்தது. கடலும் கடலைச் சார்ந்த ஊரும் பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. எனவே நாகப்பட்டினம் என்று இரண்டு சுழி ‘ன’ போட்டுதான் எழுத வேண்டும் என்று கூறி அதையும் வழக்கத்தில் கொண்டுவந்தோம்.

‘மஞ்சரி’ மாத இதழில் ‘கவி பாடலாம்’ என்ற தலைப்பில் வந்த ‘யாப்பிலக்கணம்’ பற்றித் தமிழறிஞர் கி.வா. செகநாதன் அவர்கள் எழுதிய கட்டுரை என்னை யாப்பிலக்கணப் பயிற்சிக்குத் தூண்டியது.
‘புலவர்’ தேர்வு முடிந்த பின், பொறையாறில் ‘செம்மலர் பைந்தமிழ்க் கல்லூரி’ யை நடத்தி வந்த புலவர் முத்தையனார் என்னைக் காலை, மாலை நேரங்களில் யாப்பிலக்கண வகுப்பு எடுக்கச் சொன்னார். அதனால் யாப்பிலக்கணத்தை ஆய்ந்து படிக்கும் சூழல் உருவானது.
தரங்கம்பாடியில் முதல் சீர்திருத்த திருமணம் என்னுடைய திருமணம்தான். பகுத்தறிவாeரும் ‘மாணாக்கன்’ இதழ் ஆசிரியருமான அறிஞர் வி.பொ. பழனிவேலனார் தலைமையில் 20.8.1964 இல் நடைபெற்றது.

‘கோயிலுக்குப் போனாலும்
குரங்கைக் கும்பிட்டாலும்
நீ எனக்குச் சொந்தமடி- தமிழே
நான் உனக்குப் பந்தமடி!’
என்ற பாடல் என் முதல் பாடல்.
‘காவியணிந்து இடுப்பிலே கொத்துச்
சாவி யணிந்து கண்டாரைக் காமுற்று
பாவிகளாய்த் திரியும் பண்டாரச்
சன்னதிகçeத் துண்டாட வேண்டும்
வாளினால் அல்ல - வள்ளுவர் நூலினால்’
என்ற என் பாடல்தான் எனக்குள் இருந்த தமிழையும் பகுத்தறிவையும் ஒன்றிணைத்தது.

ஒரு கட்டத்தில் வி.பொ. பழனிவேலனார் அவர்கள் ‘மாணக்கன் இதழை எங்களிடம் (தமிழ்ச் செல்வன் அவர்களும் நானும்) அளித்து நடத்தச் சொல்லி, அச்சு எழுத்துக்களையும் உருவாய் நூறும் அளித்தார். நாங்கள் ஈராண்டுகள் ‘மாணக்கன்’ இதழை நடத்தினோம். ‘தன்மானத் தனித்தமிழ் இலக்கியத் இதழ்’ என்ற குறிப்புடன் நடத்தினார். நாங்கள் ‘தன்மானத் தனித்தமிழ்த் திங்களிதழ்’ என்றே நடத்தினோம்.





பின் ‘வேந்தம்’ என்ற பெயரில் தன்மானத் தனித்தமிழ் இதழை 1973 இல் வெளிக் கொண்டுவந்தோம். இரண்டு இதழ்கள் மட்டும் எங்களால் நடத்தப்பட்டன. பொருள் இழப்பினால் இந்த இதழும் நிறுத்தப்பட்டது.

கே: உங்களுடைய வெண்பா பாடல்கள், கட்டுரைகள் குறித்து...
என்னுடைய பாடல்கள், கட்டுரைகள் பல்வேறு வெளியாகியுள்ளன. தென்மொழி, பாவேந்தர் குயில், மாணாக்கன், அறிவு, தமிழ்ச்சிட்டு, போர்வாள், தமிழ்நிலம், முரசொலி, உண்மை, மீண்டும் கவிக்கொண்டல், நாத்திகம், பாவலரேறு பாட்டியக்கம் போன்ற இதழ்களில் வெளிவந்தன.
நான் எழுதிய ‘ நறுந்துணர்’ (மணமிக்க பூங்கொத்து) என்னும் நூலுக்கு மு. தமிழ்க் குடிமகனார் மதிப்புரை வழங்கியுள்ளார். ‘இராவண காவியம்’ இயற்றிய புலவர் குழந்தையார் அவர்கள் வெளியிட்டுப் பாராட்டியுள்ளார்.
நான் இயற்றிய குழந்தைகளுக்கான தனித்தமிழ்ப் பாக்களை ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றார் தமிழ்க்குடிமகனார்.

‘தமிழ இனமே’ என்ற நூலுக்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு. கி.வீரமணி அவர்கள், ‘‘இச்சிறுநூல் ‘ நாண்கெட்டு வாழல் முறையோ’ என்று தொடங்கி இருபது தலைப்புகளில் புராணத்தைத் தேடல் முறையோ? என்ற முத்தாய்ப்புடன் முடித்திருக்கிறார்’’ என்று பாராட்டி அணிந்துரை வழங்கினார்.
‘தமிழா’ என்னும் தலைப்பில் 50 பாடல்களின் தொகுதியாக ஒரு நூல் வெளியிட்டேன். அந்நூலை வி.பொ. பழனிவேலனார் பாராட்டி எழுதியுள்ளார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் பண்புரை வழங்கியுள்ளார்.

‘கனித்தொகை’ என்ற 60 தனிப்பாடல்களின் தொகுப்பிற்கு ‘விடுதலை’ மதிப்புரை வெளியிட்டது. அதில் ‘கருப்புச்சட்டைப்பாவலன் தரங்கை. பன்னீர்ச் செல்வன் படைத்திட்ட ஒரு அரிய கவிதைத் தொகுப்பின் தலைப்புத்தான் கனித்தொகை’ என்று மதிப்புரை அளித்தது.

திருவாரூர் இலக்கணப் புலவர் திரு. சரவணத்தமிழனார் அவர்களுடன் ‘இயற்றமிழ்ப் பயிற்றகம்’ என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டேன். அப்போது சரவணத் தமிழனார் அவர்கள்,
‘பாரதியை விஞ்சிய பாவேந்தரை இருமடங்கு சொல் வeத்தால் விஞ்சிய பெருஞ்சித்திரனாரினும் தரங்கை பன்னீர்ச் செல்வத்தின் சொற்செறிவு கண்டு, பற்று மாறியது’ என்று பாராட்டினார். என்னை பயிற்றகத்தின் ‘தத்துப்பாவலர்’ என அறிவித்து, ‘சொற்செறிவுப்பாவலர்’ என்று பட்டம் வழங்கினார்
தற்போது தமிழவேழம் நா. அருணாசலம் அவர்கள் தொடங்கிய ‘தமிழ்ச்சான்றோர் பேரவை’யில் இணைந்து தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறேன்.

கே: உங்கள் எதிர்காலத் திட்டம் குறித்து...

இதுவரை நான் எழுதிய பாக்களைத் தொகுத்து நூல்களாக வெளியிட வேண்டும். அதற்கான வேலைகளைத் தொடங்கவுள்ளேன்.

தலைக்கடன்

தலைக்கடன்
(நேரிசை ஆசிரியப்பா)

நோயகம் மறைத்து; வாயகம் பறைத்து;
காயகம் பற்றிக் கனியகம் எற்றி;
பாயகம் களித்துப பணியகம் நெளித்து
தூயகம் இழந்து துயரகம் உழந்து;
நன்னெறி சோர்ந்து புன்னெறி சார்ந்து
தொன்னெறி போழ்க்கும் அன்னெறி சூழ்ந்தே
உழைப்பினை அயிர்க்கும் உளிவடி படிமப்
பிழைப்பினை நம்பிப் பேதுற இறைஞ்சி;
உடன்பிறப் பினையுங் கடன்குழித் தள்ளி
இடனுங் கால இயல்புங் காரத்து; (10)

சாதிவால் பெயருடன் சளைப்பற நீட்டி;
ஓதிய கல்வி உதட்டோ டோட்டி;
காலமும் நேரமும் கணித்துப் பார்த்தபின்
மூலக் கருத்தினை மூலையிற் கிடத்தி;
ஈன்றாள் எள்ளி; இடுப்புக் கூனிடத்
தான்றேய்ந் துழைத்துத் தம்மைப் பேணிய
தந்தை இகழ்ந்து; தருக்கிச் செருக்கிச்
செந்தமிழ்ப் பயிரைச் செகுக்கும் பார்ப்பார்
தன்னினம் மேவத் தாங்கும் பூணூல்

வன்னியன் பிள்ளை வைசியன் எனப் பெயர் (20)
கூறிக் குறுகிக் குன்றாத் தமிழ்ந்நெறி
நூறிச் சிதைய நோற்றுப பூண்டு;
பார்ப்பார் தமிழே பைந்தமிழ் என்று
நேர்ப்பாங் கின்றி நெட்டுரை புகன்று;
தீப்புகைச் சுருட்டுத் திகழிதழ் இசைத்தே
ஏப்பகை விழியர் ‡ எச்சிற் கனியர்‡
கூப்புறு நகிலின் கூர்நுனை எழிலர் ‡
காப்பறு பெண்மைக் கடைவிரி தொழிலர்‡
காட்சி மாந்திக் கழிபழி ஏந்தி
ஆட்சிக் குரிய அன்புடைத் துணைவியை (30)

நெல்லாய்ப் பொரித்து - நீராய் எரித்துச்-
சொல்லாற் கோறிச் - சோற்றுத் தசைபொதி
காமச் சுவைதரு கருவியாய்க் கருதி
ஊமென உறுமி உழைக்கப் பணித்தே
ஆட்டைக் கொன்றாய் அருமக வீத்துக் ;
கூட்டெ லும்பாய்க் - கூனற் பிறப்பாய்க் -
காட்டெ ருமையாய்க் கல்விக் கூடப்
பாட்டையே நோக்கிடாப் பண்பாய் - வளர்த்துத்
தரங்கெட வாழுந் தமிழ மாந்தீர்!
உரங்கொளச் சற்றே உளங்கொண் டிடுக ; (40)

பொய்யிலை -ஆசியக் கண்ட நடுவிலிருந்து
பய்யப் பய்யப் பைந்தமிழ் குமரித்
தாயகம் போந்து, தமிழர் நெறிக்கும்
சேயகத் தாரவர் சிறப்பில் நெறிக்கும்
முரணிய வற்றை மூடி மறைத்துக்
கரணிய மற்ற கற்பனைக் கதைகளைக்
கடுகி யாத்துக் கண்போற் காத்து,
விடுதலைத் தமிழரை வீழ்த்திடத் தமதடி
வருடப் பழக்கிய வஞ்சக ஆரியர்
திருட வகுத்த திட்டமே சடங்குகள்! (50)

தொல்லை யளிப்பரைத் தூக்கில் நெறிக்கவும்
எல்லை வகுப்போ டினப்பூண் செறிக்கவும்
கரியுடற் தவழ்த்திய கயிறே பூணூல் !
தெரியுமிவ் வுலகுடன் திகழும் புடவியுள்
எல்லாப் பொருளையும் இனிதே யாய்ந்திட
ஒல்காத் தன்னால் ஒல்லுமென் றியங்கும்
நறைதமிழ்த் தனையே நலித்திடப் புகுத்திய
இறைமொழிக் காப்பே இறந்த வடமொழி !
பண்ட மேய்க்கிப் பார்ப்பார் தமிழர்
பண்பெழிற் பாங்கினைப் பாழ்செய் திட்டார் ! (60)

வணிக நோக்குடன் வந்த ஆங்கிலர்
அணிகம் பற்பல அணிபெற இவர்ந்து
பன்மயி ராடை பளிங்குப் பாண்டம்
மென்சுவை வடிநீர் மிகுவெண் சுருட்டு
தன்றாய் ஆங்கிலம் தளுக்கு மகளிர்
இன்னன காட்டி இணைகுழல் நீட்டி
ஆட்சியைப் பற்றி அருந்தமிழ் மொழியைக்
காட்சிப் பொருளாய்க் கருத்தறச் செய்தார் ;
நட்பினர் பெய்த நஞ்சே யாயினும்
கொட்பறு நெஞ்சுடன் குலவி யயின்றே (70)

உவப்புறுந் தமிழர் ஒப்பில் நாகரிக
நிவப்பறப் பகட்டினை நிலவிடச் செய்தார்;
படிப்பு தந்தார் பண்பைக் கல்ல ;
துடிப்பு தந்தார் தோன்றலை வெல்ல ;
குடிப்பு தந்தார் குறிக்கோள் மறக்க;
முடிப்பு தந்தார் முதுக்குறை மழங்க ;
சினங்கொளல் வேண்டா ; செயற்கை அமைப்பாய்
இனம்பல விரவிய இந்தியா செய்தார்!
நடையும் உடையும் நட்பும் பெட்பும்
கொடையும் படையும் குறியும் நெறியும் (80)

அணியும் பணியும் அறமும் மறமும்
துணியும் மணியும் துணிவுந் தணிவும்
ஆட்டமும் நாட்டமும் ஆற்றலும் நோற்றலும்
கூட்டமும் ஈட்டமும் கோன்மையும் பான்மையும்
ஒன்றிடாக் கும்பலை ஒன்றிய மாக்கி
தன்றாய் பிரித்தன் தழைக்கச் செய்தார் ;
கொதிப்புறு குருதி கொதித்துப் பரவ
புதுப்புனை பாரத பொய்மையுள் மூழ்கி
விடுதலை யுணர்வுடன் வீறுகொண் டெழுந்து
கடுகென வெடித்துக் கடலென முழங்கிக் (90)

மடிதிரைக் கடலுள் மரக்கலஞ் செலுத்திக்
கொடியுடன் மறைந்த குமரனாயத் தோன்றி
பழுவெலும் பொடியப் பாழொறுப் பெய்தித்
தொழுநோய்ப் பட்டுத் துப்புமிழ் வேந்தித்
தூக்கும் சூட்டெஃகத் துளைப்பும் நேர்த்து
நாக்கினை இழந்தோன் நற்பண் பிறம்போல்
தோற்பொருள் வணிகரைத் துரத்தி யதற்பின்
வாய்பொதி நரிமை வடவர் கையில்
நாட்டை மொழியைக் காட்டிக் கொடுத்துக்
கூட்ட ரசமைத்த கொள்கை சரியோ (100)

பலகணித் திறப்புப் பவ்வீ மணக்கவோ?
உலக நாடர் ஒன்றிய அவையினில்
நந்தமிழ்த் தலைவன் நம்மினம் புகல்வனோ?
செந்தமிழ் மொழியிற் செப்பிடற் கொல்லுமோ?
பன்மொழிக் குழுக்களைப் பாங்குடன் உயிர்த்த
தென்மொழி அஞ்சல் தலையிடம் பெற்றதோ?
கம்பிச் செய்தி கடுகி விடுத்திட
அம்பொற் றமிழ்மொழி ஆற்றல் அற்றதோ?
பாரடா எந்தம் பழமை என்பீர்,
யாரடா, நின்பிறப் பெழுதடா!! என்னில் (110)

இந்தியன் என்றே எழுதிடும் நீர்தாம்
இந்திய ராமோ? ஈதோ, உரிமை?
நாடாள் மன்றில் நமதுயிர்த் தமிழிலை‡
கூடாப் பன்னெறிக் கூட்டமைப் பேனோ?
பூணூற் நீயர் புகுத்திய மரபும்
வாணிக ஆங்கிலர் வழங்கிய உறவும்
வயிற்றுக் காகவே வாழ்நர்க் கினிதே ;
பயிற்றக் கல்லாப் பாழ்நர்க் கெழிலே ;
எயிற்றைக் காட்டி இயங்குநர்க் குயர்வே ;
முயற்றிச் சிறவா மோழையர்க் கமிழ்தே ; (120)

தன்னைப் பயந்த தாயின் வித்தும்
முன்னைக் கருவும் மொழியாந் திருவும்
தாவறச் செறித்த தந்தை வித்தும்
நோவறுங் கல்வி நுவலா சிரியர்
உடம்புடைக் குருதி உணர்வுடை வித்தும்
முடம்படாத் தமிழ்ந்நெறி முகிழ்த்த தாயின்,
நாட்டை ‡ மொழியை ‡ நாகரி கப்பண்
பாட்டை ‡ இனத்தைப் பாழ்செய் மாற்றார்
பூட்டை யுடைத்துப் பொசுக்கித்
தாட்டளை யறுமின் தாயகத் தீரே? (130)

(வாயகம் பறைத்து - வெற்றுப்பேச்சுக்களை மிகுதியாகப்பேசி; பணியகம் நெளித்து-அலுவல்களைச் செம்மையாகச் செய்யாமல் ஏமாற்றி; துயரம் உழந்து - துயர் தரும் செயல்களில் முனைந்து; போழ்க்கும் - குலைவுறச் செய்யும்; அயிர்க்கும் - ஐயம் கொள்ளும்; அன்னெறி சூழ்ந்து- தமிழத்திற்குப் புறம்பான கொள்கைகளை ஆராய்ந்து ; படிமம் -சிலை ; பிழைப்பு - தவறு; பேதுற - அறிவு மயக்கமுற்று ; கரத்து - மறைத்து; சளைப்பற - தளர்ச்சியின்றி; செகுக்கும் - அழிக்கும்)

(தூறிச்சிதைய - சிதறுண்டழிய ; நோற்று - துயரேற்று ; நேர்ப்பாங்கு - நேர்மை ; நெட்டுரை -பொருளற்ற பேச்சு ; ஏப்பகை விழியர் - அம்பின் கூர்மையைப் பழிக்கும் படியான கூரிய விழியை உடையவரான பொதுமகளிர் ; கூப்புறுநகில் - கூம்பிய கொங்கை; கோறி - கொலை செய்து ; ஆட்டை ‡ ஆண்டு ; நீறு - சாம்பல்)

(சேயகம் - வெகுதொலைவிலுள்ள இடம் ; முரணிய - மாறுபட்ட ; கடுகி -விரைந்து ; யாத்து - இயற்றி ;இனப் பூண் செறிக்க - ஆரிய இனக்கட்டுப்பாட்டை வலிவுறச்செய்திட ; தவழ்த்திய -தவழச்செய்த ; புடவி - ஞாயிற்று மண்டிலம் ; ஒல்கா - தளர்ச்சியில்லா ; ஒல்லும் - இயலும் ; நறை - தேன் ; இறந்த வடமொழி - மக்கள் பேச்சு வழக்கு அற்றதால் இறந்துவிட்டதென மொழி ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்ற சமற்கிருதம்; (பண்டம் - ஆடு, மாடு போன்ற விலங்கினம் ; அணிகம் -சிவிகை போன்ற ஊர்தி ; இவர்ந்து ‡ மேல் ஏறி ; வடிநீர் - குளம்பி (காபி), தேநீர் (டீ) போன்ற பருகங்கள் ; வெண்சுருட்டு -சிகரெட்டு என்னும் புகையிலைத்தூள் புகைப்பு ; தளுக்கு - காமக்கவர்ச்சியூட்டும் மகளிர் நிலை ; இணைகுழல் -சூட்டெஃகம் (கன்); கொட்பு -மனக்குழப்பம், அயின்று - உணவுண்டு.

(நிவப்புற - உயர்வு குன்றிட ; பகட்டு - போலிப்புனைவு;கல்ல - தோண்டி எடுக்க ; துடிப்பு - துடித்து எழும்புதற்குரிய உணர்ச்சி; தோன்றல் - உடன்பிறப்பினன் ; குடிப்பு - மயக்கம் தரும் பருகம் (லிக்கர்) முடிப்பு -மிகுதியான பணம் ; முதுக்குறை - முதிர்ந்த அறிவு; விரவிய -கலப்புற்றுள்ள பெட்பு ‡விருப்பந்தரும் தன்மை ; குறி ‡ குறிக்கோள் (எய்ம்) நெறி - கொள்கை (பிரின்சிபில்)(மறம் -வீரம் ; தணிவு ‡ தன்னடக்கப் பண்பு ; நோற்றல் - முயற்சி ; கோண்மை - நாடாளும் தன்மை ; பான்மை - தன்மை (பண்பு); பிரித்தன் - பிரிட்டன் என்னும் ஆங்கிலர் நாடு.)

(குமரன் -இந்திய துணைக்கண்ட விடுதலை ஈகச் செம்மல் திருப்பூர் குமரன் ; துப்புமிழ்வு-துப்புகின்ற உமிழ்நீர்; சூட்டெஃகம் - துப்பாக்கி (துருக்கிய மொழிச் சொல்) ; நேர்த்து -எய்தி ; தோற்பொருள் வணிகர் - ஆங்கிலர் ; நரிமை - உள்ளொன்று கருதி வெளியயான்று செய்யும் ஆரியப் பண்பு (விலங்காகிய நரியின் நடப்பு;(பலகணி - சன்னல் (போர்த்துக்கீயச் சொல்); பவ்வீ ‡ சாணம் (ப+ஈ=பீ) ; உலக ஒன்றியம் - யூ.என்.ஓ. ; தென்மொழி - தமிழ் ; கம்பியச்செய்தி - தொலைவரி (தந்தி சமற்கிருத டான் டிரி யின் திரிபு)
(பயந்த - ஈன்ற ; தாவற - குற்றமின்றி ; நோவறுங்கல்வி - அறியாமைத் துன்பம் அகற்றுங் கருவியாம் கல்வி ; நுவல் - கற்பி ; முடம்படாத் தமிழர் நெறி - தன்மானத் தனித்தமிழ இனப் பண்பு ; முகிழ்த்தல் - தோன்றுதல் ; தாட்டளை - தாள் + தளை (அடிமைத் தன்மை) ; அறுமின் - அறுத்து எறியுங்கள்.

அத்திக்கனி

1. அத்திக்கனி
(கலிவெண்பா)

ஓதக் கடல்போல் ஒலிதமிழ் மாக்கூட்டம்
காதமும் தாண்டிக் கடுகிக் குழுமியது ;
மாந்த வளவாழ்வு மாநாட்(டு) அரங்கினில்
பாந்தமாய்ப் பட்டறிந்த பண்பாளர் சொற்பொழிவு
மொய்ம்பார் தமிழமைச்சர் முன்னர் நிகழ்ந்ததுவே ;
ஐம்ப(து) அகவை அடைந்த அறவாணர்
(ஆண்றகலைக் கல்லூரி அண்மை முதல்வர்)
ஊன்றி உளந்தோய ஓங்கி நெடிதுரைத்தார் ;
எல்லா அலுவலரும் ஏதோ ஒருவகையில்
பொல்லாக்கை யூட்டும் பூரியரே ; இந்நாட்டில்,
கோடாப் பழந்தமிழ்க் கோன்மை சிதைந்தது;
மாடாய் உழைத்தும் மரமாய் உணர்வழிந்த
பீடார் தமிழினப் பேதமை யால் சிவப்பு
நாடா எனுஞ்சிலந்தி நம்மைப் பிணைத்துளது;
மக்களைச் சீர்திருத்தும் மாயப் பெரியோர்கள்
கொக்கரிக்கும் இந்தக் கொடுமை தடுக்கவில்லை
ஒப்போலை நாடி உலகாள முன்வருவோர்
தப்பேதும் காணார்போல் தம்முயர்வு காண்கின்றார் ;
பட்டம் பதவி பணம்மூன்றும் கண்மறைக்கச்
சட்டம் கழுதை சரளி பயில்கிறது ;
எல்லாரும் தாமுணர்ந்தால், யாண்டும்கை யூட்டமே
இல்லாமல் செய்துவிடல் இன்றே நிகழ்ந்துவிடும் ;
சென்னி வணங்காச் செழுமரபுச் செந்தமிழர்
உன்னித் தெளிவுறுக ; ஒண்மைச் சிறப்புறுக!
நாடாள் அமைச்சர் நாணித் தலைகுனிந்து
காடாளப் போவதுபோல் காற்றாய் நழுவிவிட்டார்!
அஞ்சாமல் மெய்ம்மை அமைச்சர்முன் கூறிவிட்ட
செஞ்சொல் அறவாணர் சீர்திருத்தச் செம்ம(ல்) எனப்
பொந்திகை உற்ற பொதுமக்கள் வாயார்த்து
வந்த திசை நோக்கி வண்டாய்ப் பறந்தனர் ;
பண்டை வளவேந்தன் பள்ளியறை போலமைந்த
வண்ண மகிழுந்தில் வாகாய் மனையுற்றே,
இல்லாள் களிக்க இசைத்தார் அறவாணர்:
பல்லான்றோர் போற்றப் பளிச்சென்று பேசிவிட்டேன்!
கோவில் அறங்காத்துக் கொள்ளைப் பெருஞ்செல்வம்
மேவிச் செழித்த -மெருகப்பர் ஈன்ற-
விழுமிய பொற்பூண் விளங்கும் மனைவி
கொழுநன் புகழில் குளித்தாள்! உரைநன்று
கூடத்தில் காத்திருக்கும் கூட்டத்தைப் பார்த்துப்பின்
மாடத்தில் போந்திந்த மங்கையைப் பாருங்கள்
என்றாள் குவளை ; இணங்கி அறவாணர்
நின்ற பெருங்கூட்டம் நிற்க, நிரல்படத்
தன்பால் அழைத்துத், தளர்வில்லை, ஓரிடம்
பொன்போல் பெறநீர் பொருளிது தந்திடுக,
இன்றேல் வெளிச்செல்க, எத்துணையர் காத்துள்ளார்
என்று விலைசொல்லி ஏற்றதம் கல்லூரி
மாணவர் சேர்க்கையில் மாண்பொருள் ஈட்டினார்!
நாணமறப் பின்வந்த நாளிதழுள் முன்னாளில்
ஒற்றைத் தனிமகனாய் ஓங்கிக்கை யூட்டத்தைச்
செற்ற அறவாணர் செய்தி வெளிவர
செய்தித்தாள் கண்டு சிரித்தார் அறவாணர்!
செய்தித்தாள் கண்டு சிரித்தார், அறவாணர்
கேட்ட தொகைதந்து கேடில் விழுச்செல்வம்
ஈட்ட இடம்பிடித்தார்! என்செய்யும் இந்நாடு?
குற்றம் தடுப்பதியார்? கொள்கை வகுப்பதியார்?
கற்றுணர்ந்த நெஞ்சே, கழறு?

(நன்றி: கைகாட்டி, மதுரை 15.1.72)

(ஓதம் - கடலலை, காதம் -(ஏறத்தாழ) பத்துக்கல் தொலைவு; கடுகி-விரைந்து; பாந்தம் - ஒழுங்கு; மொய்ம்புஆர்‡வலிமைமிக்க ; கையூட்டு -கைக்கூலி (இலஞ்சம் (வ); பூரியர் - கீழ்மைக்குணத்தோர்; கோன்மை - அரசாட்சி; கோடா - திறம்பாத ; பீடுஆர்-பெருமைமிக்க ; ஒப்போலை -ஓட்டு ; சென்னி-தலை ; உன்னி - தேர்ந்து ; ஓண்மை - புகழ் ; பொந்திகை -நிறைவு ; மகிழுந்து - பிளசர் கார் ; விழுமிய - சிறந்த ; மாடம் - மேல்மாடி ; நிரல் - வரிசை, செற்ற - சிறந்த ; கேடில் விழுச்செல்வம் - குற்றமற்ற சிறந்த செல்வமாகிய கல்வி).


2. இல்லிக்குடம்
(கலிவெண்பா)

மஞ்சள் பொலிந்த மடலைப் பலமுறை
கொஞ்சிப் படித்துக் குழறி மகிழ்ந்தான் ;
பனிப்புற் கொறித்திடப் பாயும் முயற்போல்
இனிப்பு வழங்கி எகிறிக் குதித்தான் ;
மகனைப் பயந்த மனைவியைக் காணப்
புகலரும் ஆசைகெழு பொன்னன் (அறிவியல்
பட்டப் படிப்பாளி) பக்கத்துக் கண்ணாடிச்
சட்டக் கடவுளைச் சற்றே வணங்கிவிட்டு,
ஆற்றும் அலுவலுக்(கு) ஐந்நாள் விடுப்பிட்டுக்
காற்றாய்க் கடுகினான் ; கழைதோள் மனைவி
மடிதவழ் செல்வன் மதிமுகம் நோக்கி
வடிநறை மாந்திய வண்டினைப் போலவும்
கார்முகில் கண்ட கவின்மயில் போலவும்
பார்தமிழ் வீழ்த்திய பார்ப்பனன் போலவும்
அம்புலி எய்திய ஆர்ம்சுடுராங் போலவும்
கம்பன் வடித்த கலியினம் போலவும்
மட்டற லானான்; மகனைக் கருதிமிகக்
கட்டினான் நீடிய கற்பனைக் கோட்டை!
பிறப்பின் சிறப்பைப் பின்னை நிகழ்வை
இறப்பப் புனைந்தே எழுதிக் கொடுத்தும்
திருவாய் மலர்ந்தும் திறந்தவா யர்பால்
வருவாய் திரட்டி வயிற்றை நிரப்பும்
கணியனை நாடிக் கழறக் குழைந்தான் ;
மணிமணி யான மடப்பொய் விழைந்தான்;
ஒருநூ(று) அகவை உயிருடன் வாழ்ந்து
வருமாறு மைந்தற்கு வாய்த்த கணிப்பைத்
திறம்பா உரையயனத் தேர்ந்து மகிழ்ந்தான்;
பறம்பாள் கொடைமகன் பாரியைப் போன்று
பிறப்பியம் ஆய்ந்து பிதற்றிய வற்குச்
சிறப்புகள் பற்பல செய்து களித்தான்;
குலதெய்வ மான குமரன் பரவி
வலமுறச் சுற்றி வணங்கி மகிழ்ந்தான்;
குடும்ப முதியோர் குறித்த படியே
அடம்பாய் வளர்ந்த அறிவன் மயிரை
மழித்துப் படைத்து மனம்போல் மகிழ்ந்தான்!
கொழித்துப் புடைத்த குறுநொய் அனைய
நறுநெய் அளையூண் நயந்தோர்க்(கு) அளித்தே
உறுபொய்ப் புகழில் ஒளிர்ந்து மகிழ்ந்தான்!
ஒருநாள் ..... அறிவன் உடல்நலம் குன்ற
முருகன் திரு நீற்றை மூத்தோர் செறிக்க,
கழிசாணச் சாம்பலால் காக்க முடியா
அழிதுயர் மேவி அறிவன் இறந்தான் ;
பொலிமுகம் சாம்பிய பொன்னன் விதி யின்
வலியினை வெல்ல வகையா(து) உளதே ;
அறிவன் தலையினில் ஆண்டவன் அன்றே
குறியாய் எழுதியவை கோணி நடக்குமே?
எல்லாம் அவன் செயல் என்று பிதற்றினான்;
கல்லாக் கணியன் கழறும் பிறப்பியம்‡
இல்லா உருவக எத்துப் புனைகதை‡
வல்லான் உகப்பனோ? வாயா(து) ஒழியின்
எல்லாம் அவன் செயல் என்றே அமைவனோ?
பல்லான்ற கேள்விப் பயன்கெட வாழ்வனோ?
பட்டும் பகுத்தறியாப் பட்டப் படிப்பினால்
கிட்டிய(து) என்ன, கிளத்து?

நன்றி : கைகாட்டி - மதுரை (30.12.72)

(பொலிந்த - அழகான, புகல்தரும் - விளக்கிச் சொல்ல இயலாத ; கழை - மூங்கில் : நறை-தேன் ; மாந்திய -உண்ட ; பார்த்தமிழ் -உலகம் போற்றுகின்ற தமிழ் ; ஆர்ம்சுடுராங் - திங்களில் இறங்கிய முதல் விண்வெளி வீரன் ஆர்ம்ஸ்ட்ராங்க் ; மட்டு - அளவு ; இறப்ப - மிகுதியாக ; கணியன் - சோதிடன் ; பிறப்பியம் - பிறந்த நாள் குறிப்புகள் ; பரவி - புகழ்ந்து ; அடம்பு - அடப்பங்கொடி ; மழித்தல் - மயிரைக் களைதல் ; அளையூண் - கலந்த உணவு ; செறிக்க - நிறைய பூசிட ; மேவி ‡ மேம்பட்டு ; சாம்பிய - சுருக்குமுற ; கோணி - மாறி; அவன் - கடவுள் என்னும் கற்பனைத் தலைவன் ; உகத்தல் - விரும்புதல் ; பல்லான்ற கேள்வி - பலவகையில் நிறைந்த கேள்வியாகிய அறிவு ; பட்டும் - துன்புற்றும்; கிளத்து - கூறு)

3. எதிர்காலத் தமிழிளைஞ!
(எண்சீர் ஆசிரிய மண்டிலம்)

1. அவியாத வறுமையினால் அவிந்த அறிவை -
அகலாத இனப்பகையால் அகன்ற வலிவை-
குவியாத செயன்முறையால் குலைந்த திறனைக்-
குறியாத செலவுகளால் குனிந்த தலையைச-
செவியார்நத கதைப்பொழிவால் சிதர்ந்த பண்பைச்-
சிறுக்கியரின் குலுக்குகளால் சிதைந்த வாழ்வைத்
தவிராத மதமரபால் தாழ்ந்த மதிப்பைத்
தமிழிளைஞ! மீட்காமல் தளர லாமோ?

2. பார்ப்பனிய உறவுகளால் பாழாய்ப் போன
பண்பாட்டை மீட்பதற்குப் படையைத் தொகுத்தும்
வேர்ப்பலவாய் விளைதமிழில் விரவிச் செறிந்த
வேற்றுச்சொல் விலக்குதற்கோர் இயக்கம் வகுத்தும்;
ஆர்த்தெழுந்த அரிமாவாய் முழங்கித் திரண்டும்;
அரசியலில் சறுக்குற்றே இற்றை நாளில்
நேர்ப்பகைக்குக் கால்வருடிக் காட்டிக் கொடுக்கும்
நெறிகேட்டால் தமிழிளைஞ, நெகிழ லாமோ?

(பதின்சீர் ஆசிரிய மண்டிலம்)

3. தழைத்தென்ன -கிளைத்தென்ன-
தன்மானம் விலைபோக்கித்
தமிழினத்துப் பகையூக்கித்
தலைநிமிர்த்திப் பிதற்ற லேனோ? வாலைக்
குலைத்துண்டு தன்னினத்தைக்
குரைக்கும்நாய் போல் தமிழக்
குமுகாயச் சீர்குலைவு
கொடும்பசியால் நிலைத்த கூனோ? வயிரம்
இழைத்துள்ள தலைக்கவிகை
எண்கோடி உருபாவில்
இறையயன்ற பொம்மைக்கே
இரித்தனுனக் கேற்பு தானோ? மக்கள்
உழைத்துண்ணப் பணியில்லை-
உடுத்துலவத் துணியில்லை -
உறைதற்குக் குடிலுமில்லை-
ஒப்போலை உரிமை ஏனோ? இளைஞ!

4. தெருநோக்கி, மங்கையரின்
திரள்நோக்கித், திரையரங்கின்
திசைநோக்கித் தினவுற்றுத்
திரிவோரின் உறவை நீக்கு; மாந்தப்
பெருநோக்கைத் தேன்பொழிவாய்ப்
பேசுதலைத் தொழிலாக்கிப்
பெற்றோரின் பிறங்கடையர்
பின்னிறுத்துங் கயமை தாக்கு; கடவுள்
அருள்நோக்கிக் கையேந்தி
அல்லலுற்றே ஊழ்நம்பி
அலமந்துச் சீரழியும்
அருந்தமிழர் மடமை போக்கு; வறுமை
இருள்நீக்கி, அறியாமை
இழிவாழ்வின் இடர்நீக்கி,
எதிர்காலத் தெளிவூட்டும்
இனமானத் தொண்டை ஊக்கு, மைந்த!

(தலைக்கவிகை - கிரீடம் (வ);இரித்தல் - வீணாக்கல்; ஒப்போலை-வோட்; பிறங்கடையர்-வாரிசு (வ) ஊழ் - விதி (மதக்கற்பனை) அலமந்து -நிலைகுலைந்து)


5. பொழுதுபோக வில்லையயனப்
பொறுக்கியாகத் திரிகின்ற
பூரியரின் உரிமைப்போர்
பூழ்தியயன ஊதி நூறு; நாளும்
அழுதழுது மன்றாடி
ஆண்டவனின் புகழ்பாடி
அழிவதற்கோ வாழ்க்கையயன
அனைவர்க்குந் தெளியக் கூறு; உரிமை
தொழுதெவனும் பெற்றதில்லை
தொண்டைமான்கள் மயக்குமொழி
தொடர்தொல்லை விலக்கி வீறு; நிலத்தை
உழுவதற்கு நீரில்லை‡
உண்பதற்குச் சோறில்லை
ஒருமைபாட் டொப்பாரி
ஓரிருவர் தொழில்தான் சீறு; நண்ப!

6) முன்பெருமை அடித்தளத்தில்
முன்னேற்ற மாளிகையை
மொய்ம்பாரக் கட்டுதற்கு
முறைவகுத்துப் பணிகள் ஆற்று; மூச்சாம்
தென்மொழியை‡உன்மொழியைத்
தீய்க்கவரும் இந்தியினைத்
தேசமொழி பயில் என்போன்
திமிரடக்கிக் கொடியை ஏற்று; தேனாய்
இன்கதைகள் புனைந்துகூறி
எளியவரை ஏமாற்றி
இனங்காட்டிக் கொடுத்திடுவோன்
எவனென்ன, துணிந்து தூற்று; தானே
தன்னுயிரைப் பலிகொடுத்துத்
தமிழீழம் மீட்கின்ற
தன்மானப் புலிப்போத்தின்
தாள்தொட்டு வணங்கிப் போற்று; தோழ!

7. பின்பாட்டு பாடுதற்கோ
பித்தனைப்போல் ஆடுதற்கோ
பெற்றுவிட்டாள் தமிழச்சி;
பேசாதே, செயலில் காட்டு, மாறாப்
பன்னாட்டு வரலாற்றைப்
படியாத தமிழருளம்
பதியுமாறு சரியாகப்
பண்ணிசைத்துப் பாடு, பாட்டு; மேலும்
முன்னாளில் தனியாசை
முறையாக அமைத்தாண்ட
முதல்மாந்தர் தமிழரென்றே
மூடர்வாய் மூடிப் பூட்டு; பிறந்த
என்னாட்டின் விடுதலைக்கே
எனதனைத்தும் பணையமெனும்
ஈழத்துப் புலிபோல
இகலரியே வெற்றி ஈட்டு; வெல்க!
(பொறுக்கி - கீழ்மைச்செயலன்; பூரியர்-கயவர்; நூறு-அழி; மொய்ம்பு -வலிமை ;பணையம் -ஈடு, இகல்அரி-வலிமையுள்ள மடங்கல் சிங்கம் -(வ)


4. சிலர்!

புழலையே விழலுக்குப் பாய்ச்சுகின்றார் - தம்
புலமையைப் பொய்த்தீயில் காய்ச்சுகின்றார்;
நிழலையே வெயிலெனத் தூற்றுகின்றார் -முன்
நெருஞ்சியைப் பஞ்சாகப் போற்றுகின்றார்! -
-சிலர்
கனவையே நிலையாகக் கொள்ளுகின்றார் -சாய்க்
கடைநீரை விலைதந்து மொள்ளுகின்றார்;
தினவையே அடக்காமல் துள்ளுகின்றார் -குறள்
திருவையே பயிலாமல் எள்ளுகின்றார்!
-சிலர்
உழைப்பையே புறந்தள்ளி ஒதுக்குகின்றார்-பொது
உடைமையைத் தமக்காகப் பதுக்குகின்றார்;
மழைப்பெய மந்திரத்தை முழக்குகின்றார்-தம்
மடமையைப் பிறர்செய்யப் பழக்குகின்றார்!
-சிலர்
பழங்கதைப் புராணங்கள் நம்புகின்றார் - திரைப்
படக்கதைக் கவர்ச்சிகளில் வெம்புகின்றார்;
தழங்கியே இதிகாசம பரப்புகின்றார் - மிகத்
தரமற்ற கதைவிற்று நிரப்புகின்றார்!
-சிலர்
அரசியலைத் தொழிலாகக் கருதுகின்றார் - எதிர்
அணியினரை முறையின்றிப் பொருதுகின்றார்;
முரசியம்பி உரிமைகளை முடக்குகின்றார்-வரன்
முறைகூறும் நல்லோரை அடக்குகின்றார்
-சிலர்
(வளரும் தமிழுலகம், தி.பி.2017, கும்ப மாத இதழ்)

(புழல்-நீர், குறள்திரு-திருக்குறள், தழங்கி-பெரிதாக இசைத்து பொருதுகின்றார்-போரிடுகிறார், இயம்பி-முழங்கி, வரன்முறை- எல்லை)

5. நிமிருங்கள்

(தனிச்சீர் சமனிலைச் சிந்து)

1. சிறைகளை உடையுங்கள்;
செம்புனல் படையுங்கள்;
சிந்தனை மலர்களைத் தூவுங்கள்-கொள்கைப்
பறைகளைக் கொட்டுங்கள்;
பகைத்தலை வெட்டுங்கள்;
பாரதம் பொய்யயனக் கூவுங்கள்!
2. பொதுநலம் பேணுங்கள்;
புரட்சியைக் காணுங்கள்
புரட்டுரை அரசினை மாற்றுங்கள்-தமிழ
நொதுமலர் திருத்துங்கள்;
நொள்ளையர் வருத்துங்கள்:
நுடங்கிடா இனப்பணி ஆற்றுங்கள்!
3. விழிகளைத் திறவுங்கள்;
விண்வெளி பறவுங்கள்;
வெற்றுரை முழக்கினை வீழ்த்துங்கள்-மொழி
அழிவினை மறியுங்கள்;
ஆணவம் எறியுங்கள்;
அறக்கொடை நெஞ்சரை வாழ்த்துங்கள்!
4. பதவியைத் துறவுங்கள்;
பணப்பயன் மறவுங்கள்;
பார்ப்பன நரிமையை விரட்டுங்கள்‡அவரின்
உதவியை விலக்குங்கள்;
ஊழலைத் துலக்குங்கள்;
ஓல்லெனப் பெரும்படை திரட்டுங்கள்!
5. இமிழ்பகை வெல்லுங்கள்;
எதிர்ப்பவன் கொல்லுங்கள்,
எரிமலை யாமெனெத் திமிருங்கள்‡இழந்த
தமிழ்நிலம் மீளுங்கள்;
தனியர சாளுங்கள்;
தருக்கிய தமிழனாய் நிமிருங்கள்!

(மீட்போலை-தி.பி.2017, கும்ப மாத இதழ்)

(செம்புனல்-குருதி, நொதுமலர் -இரண்டுங்கெட்டார், நுடங்கு தல்-தளர்ந்திடல், ஒல்லென-விரைந்து, இமிழ்-வலிமை, திமிர்தல்- சிலிர்த்தல், தருக்கு-மானத்தால் ஏற்படும் செருக்கு)

நெய்தலகம்

நெய்தலகம்

(நெய்தல் திணைக்குரிய அகப்பாக்கள்)

1.உடனீத்தேகே!
(களவு நிகழ்ந்து கொண்டிருந்த ஞான்று, சேர்ப்பன் எனப்படும் நெய்தல் நிலத்தலைவன் தன் வெளியூர்ச்செலவு குறித்த செய்தியைத் தலைவியின் தோழியிடம் ஆற்றாமையை யுணர்ந்து சினந்து மொழிகின்றாள்.)

கொண்டல் உதிர்த்த கொய்யாப் பனங்கனி
சுண்டச் சுட்டுச் சூழச் சுவைத்து
ஞண்டு பிணித்து ஞாழல் புனைந்து
பண்டு கவலறப் பாங்கியர் ஆயம்
கண்ட செறிநிழல் வண்டல் அயர்ந்த
கெண்டை விழியுகள் கண்டு மொழிமகள்
கொண்டை அளைத்துக் கொழுநகிற் குழைத்துத்
தொண்டைச் சேயிதழ் தும்பைக் கேழுற
வண்டெனக் களித்து வரையற வைகலும்
திண்டார் நெய்த்தேர் திறன்கெழ இவர்ந்தே
உண்ட நலனை உடனீத் தேகே!

(கொண்டல் - கீழைத்திசைக் காற்று. ஞாழல்‡புலியுகிர்க் கொன்றை என்னும் மரம், ஈண்டு அதன் மலர், பண்டு- முற்காலம் கவல் - கவலை, ஆயம்-குழு, வண்டல் -தமிழககுமரியர் ஆடும் ஒரு வகை விளையாட்டு. அயர்தல் - விளையாடல். கெண்டை - ஒருவகை மீன். கண்டு - கற்கண்டு. அளைத்தல் - நெருடுதல். நகில் - கொங்கை. தொண்டை - கொவ்வைக் கொடி. ஈண்டு அதன் கனி. தும்பை - தும்பைச்செடி, ஈண்டு அதன் மலர். வைகல்- அன்றாடம். நெய்த்தேர் - மகிழுந்து. இவர்தல் - ஊர்தல். அண்மி - அணுகி. கெழ - பொருந்த, அண்ணல் - தலைவன்.)

2. தணிமே!
(தலைவன் தணந்தான், உள்ளமும் உடலும் கலந்தவன் காலந்தாழ்த்தி வந்தமையால் புலந்து புழுங்கினாள் தலைவி. தோழி. தலைவன்றன் உயர்ந்த பண்பு நலன்களைப் பாராட்டிக் கூறி புலவி தணிக்கின்றாள்.)

தொலைபேசி ஈர்ப்பான் தொழிலைப் போல
விலைபேசித் தன்னுடல் விற்கும் வழுமகள்
உள்ளக் கயமை உன்னியஅறிஞன்;
பள்ளம் மேடு பாத்துணர் சான்றோன்;
நுந்தையும் தாயரும் நுணல்புலப் பிறப்பரும்
பொந்திகை யுறுமாப் பொருளுடன் மீண்டே,
அள்ளும் தெரிலின் ஆடை புனைந்து,
துள்ளுந்(து) இவர்ந்து, தூசறு நெஞ்சோடு,
ஊர்ப்புறம் தமித்தே ஒலியறத் தளரும்
சேர்ப்பன் மிகையுறச் செய்தன மறந்து
பார்ப்பன மகள்போல் பரிந்து
கார்ப்பெயல் மாலை கருதித் தணிமே!

தொலைபேசி ஈர்ப்பன் - டெலிபோன் ரிசிவர். வழுமகள் - பரத்தை, உன்னிய - ஆராய்ந்த, பாத்து -பகுத்து, நுந்தை ‡ உன்தந்தை, நுணல் புலம் - கிணற்றுத் தவளையைப் போன்ற அறியாமையுடைமை. பொந்திகை (பாவாணர்) -நிறைவு. தெரிலின் - டெரிலின் துணி. துள்ளுந்து (தென்மொழி) - மோட்டார் சைக்கிள்,இவர்ந்து - உந்தின் மேல் அமர்ந்து இயக்கி வந்து, தமித்து -தனித்து, பிறப்பர் - உடன்பிறந்தோர் (சகோதரர்)


3. கதழ்ந்தே பெயர்லன்!
(தலைவன் பிரிவினை ஆற்றிட முயலாமலும் தாயின் காவலை ஏற்றிட இயலாமலும் வருந்துகின்றாள், தலைவி. இல்லறப்பெருமையை உணர்ந்த தலைவன் விரைந்து வருவான் என்கிறாள் தோழி, அன்றில் பறவையைச் சுட்டிக் காட்டி)

சிலைகடற் கரைமிகச் சிதைந்திடத் தமித்துக்
கலைகெட, ஆரக் கவின்கெட, ஐம்பால்
விரைதரு மடல்கெட, விளங்கிதழ் நிறங்கெட,
மரைவிழி வரிகெட, மாட்டார் சுரும்பென
முயங்கிய அவன்பின் மயங்கிய மலரே ;
பயங்கெழு பசலை படர, யாய்செறி
பூட்டுக்(கு) இது நாள் புழுங்கும் நெஞ்சம்‡
கோட்டுச் சுறவாய்க் குளறித் துள்ளிடப்,
பூத்து மணக்கும் புதுமலர் தோயக்
காத்துக் குழறும் கருவண்(டு) ஆர்ப்பில்‡
பாயிருள் அறவரும் ஞாயிறு நேர்த்த
சேயிதழ் அவிரெழிற் சேர்ப்பன் கதழ்ந்தே
பெண்ணை அன்றில் பெருமை
எண்ணிப் பெயர்வன் எற்படு ஞான்றே!

(சிலை - ஆரவார ஓசை, கலை-ஆடை, ஆரம் - சந்தனம் (வ), கவின் - அழகு. ஐம்பால்- மகளிர் தலைமுடித்தொகுப்பு. விரை -மணம், இதழ் -உதடு.மரை-மான். மட்டு ஆர் சுரும்பு‡தேனைச் சுவைத்திட ஆரவாரிக்கும் வண்டு. முயங்கிய -உ டலுறவுற்ற. பயம்கெழு‡ பயன் நிறைந்த. யாய் - அன்னை. கோட்டுச்சுறவு - கொம்பன் சுறா எனப்படும் மீன். குளிறி - ஒலியயழுப்பி. அவிர் -ஒளிவீசும். கதழ்ந்து - விரைந்து.பெண்ணை -பனை(மரம்). எற்படு ஞான்று -மாலைப்பொழுது.)

4. பனியம் தண்ணிதோ!
(ஏற்றிருந்த கடமையாற்றிவிட்டு மீளுகின்ற தலைவன் பாங்கனுக்கு உரைத்தது)

செந்தமிழ் மொழிநிகர் செங்கதிர் எழுமுன்
வந்திவன் வாழும், வறள்நாத் தமிழரை
மெல்லச் செல்லென மெருகுற அரிதிற
வல்ல பார்ப்பனர் வழமைக்(கு) எழுமுன் -
கட்டு மரத்தில் கடுகிய பரதவர்
கொட்டி நிறுத்த கொழுவிறால் வாங்கி,
ஓய்வற என்னுழை உந்துழந்(து) எடுத்துச்
சேய்புலஞ் சேர்க்கும் செம்மனப் பாங்க ;
பைய உருகிடும் பளிங்குப் பனியம்
மையல் தருமவள் மார்பின் தண்ணிதோ?
ஈட்டிய அனைத்தும் ஈந்தே,
ஓட்டுநர் ஊக்கிடு ஒல்லென் செலவே!

(இவண்-தமிழ்நாடு, மெல்லச்செல்என - முன்னேற்றத்திற்குத் தடையாவன செய்து, அரிதிறம் - புழுவைப் போல் அரித்து அழிக்கும் திறன், மெருகுற-நயமாக, வழமை- வழக்கமாகச் செய்யும் இறை வழிபாட்டுப் பணி, உந்து - சரக்குந்து (லாரி). உழந்து ‡இடர்ப்பட்டு, சேய்புலம் - தொலைவிலுள்ள ஊர். பனியம் - ஐஸ்கிரிம் என்னும் சுவைப்பனிக் குழைவு. ஒல்என் செலவு - மிக மிக விரைந்து செல்லும் செலவு(பயணம் (வ)).

5. நூறும் என் உயிரே!
(பொருள் ஈட்டிடற்குப் பிரிந்த தலைவனால் ஏற்பட்ட துயரத்தை தலைவியனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதனைத் தன் தோழியிடம் வெளிப்படுத்துகின்றாள்.)

காமர் தரங்கைக் காரடர் கானல்
ஏமப் புன்னை ஈர்ந்தண் புதல்வயின்
மின்றிமில் இவர்ந்து மிகைமீன் கவர்ந்த
வென்றிப் பெருமித வெயர்முத்(து) அரும்பக்
கன்றிய மெல்லிதழ் கவின்பாக் கருவென
அன்று மொழிந்தவன் ஆக்கம் நச்சி,
குன்றி இட்டுக் குன்றை ஈட்டிட
அன்றே வேட்கும் அயல்வா ணிகன்போல்
முதற்கெட முனையும் முதுக்குறை,
நுதற்சுடர் குன்ற நூறுமென் உயிரே!

(காமர்- பேரழகு, கானல் - கடற்கரைக்காடு , ஏமம்‡ மகிழ்ச்சி, வயின்- இடத்தில் , மின்திமில்- மின் ஆற்றலினால் இயக்கப்படும் மீன்பிடிப்படகு (லான்ஞ்), இவர்ந்து - ஏறிச்சென்று, கன்றிய - காதலன் செய்கையால் கன்றிச் சிவந்த , இதழ் - உதடு, கவின்பா - அழகிய பாட்டு, நச்சி-விரும்பி, குன்றி-குன்றிமணி (அளவு), குன்று-குன்றைப போல் பெருகிய, வேட்கும்-விரும்பும், அயல்வாணிகன் - வெளிநாட்டினின்றி தமிழகம் வந்து வாணிகம் செய்வோன், முதல்-முதலீடு (கேப்பிடல்), முதுக்குறை-பேரறிவு, நுதல்-நெற்றி, நூறும் -அழிக்கும்.)


6. சொற் பிழைத்தனையே!
(தலைவன் காதலியைப் பிரிந்து நாட்டைக் காக்கும் கடமை ஆற்றிடக் கடற்படைக்குச் சென்றிருந்தான். திட்டமிட்டதைவிட அவன் கடமைக்காலம் நீள்கின்றது. முன்னர்த் தலைவியிடங் கொண்டிருந்த உறவின் நினைவுகள் எழுகின்றன. தன்நெஞ்சை நோக்கிப் புலம்புகின்றான்.)

மடற்பனை பயந்த மாக்கனி யாகக்
கடற்படை யாற்றும் கடமை நீட்சி,
துஞ்சிட மறுக்கும் துயருளம், தேற்றிடும்
அஞ்சல் விடுக்கவும் அஞ்சி யயாடுங்கிக்,
களித்திடக் களித்த கைதை மடலகம்
ஒளித்துறை அளிநினைந்(து) உழலும் நெஞ்சே ;
நூற்றைந்(து) உருபா நொடைபெறு நயிலான்
காற்றில் சிலிர்த்துக் காட்டும் வனப்பில்
நறவச் சுரப்பிதழ் நசைமிகச்
சுறவத் திங்களில் சொற்பிழைத் தனையே!

(மடற்பனைப் பயந்த -மடல்கள் அடர்ந்து எறிப்பறிக்கவே, உதிர்ந்தால் எடுக்கவோ இயலாததாய பனம்பழம். மாக்கனி - பெரியபழம் (கரிய பழமுமாம்). துஞ்சிட - உறங்கிட, கைதை- தாழை, மடல் அகம்‡ தாழை மடல்கள் நிறைந்த மறைவிடம், ஒளித்துறை அளி - ஒளிந்து காதலியுடன் அன்புகனிந்திருந்த இடம். நொடை - விலை, நயிலான் - நயிலான் என்னும் செயற்கையிழைப்புடைவை. நறவம் -தேன், நசை -விருப்பம், சுறவத் திங்கள்- தை த்திங்கள்)


7. சிரித்தவள் யாரே!
(பிரிந்து சென்ற தலைவன் குறித்த ஞான்றில் வராமையால் மிக
வருந்திய தலைவி, தன் பாங்கியிடம் உரைத்தது)

நரைப்புறு முதியரும் நசைமிகக் கொண்டு
திரைப்படம் காணத் திரண்டெழு ஞான்று
ஓம்பும் பாங்கியர் உழையயனை ஓதுக்கிக்
கூம்பும் மரையலர் குழையப் புணர்ந்து
பெருவலை ஈட்டம் பெருகிடு வைகல்
ஒருவிலை தந்துணை உடன்மணந் திடுவேன் ;
தந்தை பெரியார் தன்மான வரைவு
செந்தமிழ் இனப்புகழ் செழிக்க நிகழ்வுறும் ;
அச்சம் தவிர்கென அன்பு துளும்பிட
உச்சி மோந்தே உரைத்த தலைவன்,
என்னைத் தணந்திட, இதுகால்
சென்னைத் துறையில் சிரித்தவள் யாரே!

(நசை - ஆசை, ஞான்று -நேரம், ஓம்பும் -பேணிக்காக்கும், பாங்கியர் - தோழியர், உழையயனை- பாங்கியரிடத்தினின்று என்னை, கூம்பும் மரையலர் -தாமரை மலரின் மொட்டைப் போன்ற கொங்கைகள், வரைவு - திருமணம், தணந்திட-பிரிந்திருக்க, இது கால் - இப்பொழுது, வைகல்-காலம்)


8.துன்னிய அம்பல் தொலை!
(களவொழுக்கம் தொடர்கின்றது. தலைவன் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்துகின்றான். கண்டோராலும் கருத்துணர்ந்து கொண்டோராலும் கவ்வை மிகுகின்ற நிலையைத் தோழி தலைவனுக்கு உணர்த்துகின்றான்)

எயிறு புரைமுகிழ் எழில்கெழு புன்கின்
வயிரப் புறவயின் வளரிருட் காலை,
குடவான் தோன்றுங் குழவித் திங்கள்
மடமான் மருட்டி மலர்த்தாள் தளர்க்க,
உளச்சோர்(வு) அகற்றும் ஒழுகிசை வானொலி
வளச்சார் இன்னிசை வரையற ஆர்க்கும்
நுளை,நின் வருகை நுண்மணற் கானல்
அளையகம் கொழுத்த அலவன் திரியல்
அன்ன(து) அன்றே! ஐய ;
துன்னிய அம்பல் தொலைநெறி படரே!

(எயிறு -பல், கெழு-நிறைந்த, வயின்- இடம், வளரிருட் காலை-முன்னிரவு, குடவான் - மேற்றிசை வானம், குழவித்திங்கள் - பிறை நிலவு, மடமான் - தலைவி, மலர்த்தாள் -மலரைப்போன்ற பாதங்கள், ஒழுகிசை-தொடர்ந்த இசை, வளச்சார்-வளமை நிறைந்த, வரையற- அளவற்ற, ஆர்க்கும் - ஒலிக்கும், நுளை-நுளையனே, கானல்-கடற்கரை, அளையகம் -அளையாகிய வீடு, அலவன் - ஆண்நண்டு, திரியல் - அன்னது-திரிவதனைப் போன்றது, கொழுத்த-திமிர்கொண்ட, துன்னிய அம்பல்- கிசுகிசு பேச்சுகள், தொலைநெறிபடரே-போக்குதற்கான, வழிமுறை-திருமணம் ஏற்பாடு செய்க.)

9. ஐவண அளிநிலை!
(பொதுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் குறித்த காலங்கடந்து வந்த தலைவனுக்காகப் பரிந்து வந்துரைத்தான் பாங்கன். இனியும் களவு நீட்டுதல் சிறப்பன்று. திருமணம் உடன் நிகழ்த்தலே முறையயன மறுத்துரைக்கின்றாள், பாங்கி)

மங்கையர் உருவிட மாறென நிற்கும்
செங்கேழ்ப் பொதியிலைச் செழுவை வணச்செடி
கடுக்கும் அளிநிலை காண்கண் கலுழ
இடுக்கண் எய்தும் எலுவ ; மடன்மா
ஊர்தல் மகட்கில் உண்மை தேறியோ
தேர்தல் பணியுள் திளைத்த நின்னை,
கொம்பச் சுறவின் கொழுவூண் உணக்கும்
கும்ப நகிலிடைக் குளித்தலை வேட்டு,
நோயினைத் தருமொளிப் படவழி
வாயில் விதந்தனன் வளரலர் மறந்தே!

(ஐவணம்-மருதாணிச் செடி, மாறு‡துடைப்பம் (விளக்குமாறு என்பதன் முதற்குறை), பொதி-நிறைந்த, செங்கேழ்-செந்நிறம், கடுக்கும்- போன்ற, அளிநிலை-இரக்கம் தரும் நிலை, கலுழ-வருந்த, இடுக்கண்-துன்பம், எலுவ‡தோழனே, மடல்மா ஊர்தல் - மடலூர்தல், தேர்தல் பணி - மகநாயகத்தின் தேர்தல் காலத்தில் தான் சார்ந்துள்ள இயக்கத்திற்கு ஒப்போலை திரட்டும் பணி, நின் ஐ - நின் தலைவன், கொம்பச் சுறவு- கொம்பன் சுறா என்னும் கடல் மீன்)

10. தேடுகின்றேன்
(எண்சீர் மண்டிலம்)

ஆடுகின்ற தோகையயா, தேன்றல் அணைய
அசைகின்ற முல்லையோ, தேறல் உண்ணப்
பாடுகின்ற பொன்வண்டோ, இன்பத் தமிழில்
பேசுகின்ற கிள்ளையோ, கரிய முகிலைக்
கூடுகின்ற வெண்மதியோ, காண்போர் கண்கள்
கூசுகின்ற ஒளிக்கீற்றோ, மின்னல் கண்டே
ஓடுகின்ற இளமானோ என்று தோன்றும்
உள்ளத்தில் ஊன்றிவிட்ட அவளை நோக்க!
கன்றொக்கும் சிறு நடையோ, காதல் மின்னும்
காவியத்தின் ஓவியமோ, இன்ற லர்ந்த
கொன்றையின் மெல்லியலோ, குருவி கொத்தும்
கொவ்வையின் செவ்விதழோ, முரசு கொட்டும்
வென்றியாளர் வேல்விழியோ, ஆம்பல் அளிக்கும்
வெண்மொட்டோ இளமார்பு, பழுத்த கனியோ
கன்னத்தின் செங்கதுப்பு ; என்றி ருக்கும்
கன்னியவள் கொண்டுள்ள அங்க அழகு!

உள்ளத்தில் உருவெடுத்துத் தமிழிற் பாடி,
உவகையிற் பெருக்கெடுத்துக் காதல் இன்ப
வெள்ளத்தில் கலந்தோடிக் களிப்பை யூட்டி
விதவிதமாய் நடனமாடி வியப்பைக் கூட்டி
மெள்ளமெள்ள குறுநகைக்கும் அழகு மங்கை
மலரொளியைக் கண்டீரோ உலகத் தீரே!
கள்ளமில்லாக் காரிகையைக் காதற் காவில்
காணாமல் தேடுகின்றேன் கண்ட துண்டோ?

11. பாடற்றுரைமகளே!
(கட்டளைக் கலித்துறை)

ஆழித் திரைக்கைகள்
அள்ளியந் திங்கள் அணைக்கவர,
யாழில் தவழ்ந்தாடும்
இன்னொலி உள்ளம் இழுக்கவர,
பாழில் உடுக்கூட்டம்
பன்னிறத் தோற்றம் படைத்தளிக்க,
தோழியர் கண்ணீங்கித்
தோன்றுவள் பாடற் றுறைமகளே!
புள்ளினச் சிற்றொலிப்
பூங்கா புகுந்து மிதந்துவர,
தெள்ளிய நீரோடைத்
தேன்மலர்த் தாதுப் பரப்பிவர,
உள்ளிய தெல்லாம்
ஒருமித்துக் கூடி உவந்துவர,
துள்ளி வருவாள்
துணியின்றிப் பாடற் றுறைமகளே!
பட்டும் படராமல்
பன்மணித் தென்றல் தவழ்ந்துவர,
தொட்டுத் தொடராமல்
தூமணிச் சீரிசைத் தூங்கிவர,
வெட்டும் வெடிமின்னல்
வீசும் புயலோடு வீங்கிவர,
மெட்டி குலுங்கிட
மேவுள் பாடற் றுறைமகளே!
பொங்கும் கதிரவன்
பொய்யா ஒளிப்பொன் பொலிந்துவர,
மங்கி வளர்கின்ற
திங்கட் குளுமை திரட்டிவர,
எங்குந் தனித்தமிழ்
இன்ப இயக்கந் தழைத்துவர
அங்கண் மருண்டிட
அண்டுவாள் பாடற் றுறைமகளே!
(09.03.1964 இல் எழுதப்பெற்றுத் தென்மொழியில் வெளிவந்தது)

12. நானுந்தான் முழுகவில்லை!
(எண்சீர் மண்டிலம்)

உருக்கிவிட்ட வெள்ளிபோலச் சூழ்ந்த வெள்ளம்
ஊரெல்லாம் முழுகுமாறு செய்ய, இந்தச்
செருக்கிமட்டும் முழுகாமல் நெளிகின் றாளே ;
சினையூட்டிச் சென்றவன்யார்? பருவம் தந்த
நெருக்கடியால் கருக்கொண்ட நீல முகிலின்
நிறையுடைத்த தடிப்பயலைத் தேடி, வயிறு
பருக்குமுன்னே மணமுடிக்க வேண்டும் ; வேறு
பழியில்லை ; நானுந்தான் முழுக வில்லை!
(சிற்றூர்த் தாய் ஒருத்தியின் செருமல்)

தமிழா!

தமிழா!
1. குமுகாய வறுமையிலே
குளிர்காயும் அரசியலின்
கூன் நிமிர்த்தல் வேண்டுமடா, தமிழா ‡உலகம்
நமதாகக் கயவர்தம்
நாடகத்தைத் திறனாயும்
நடுநெஞ்சைத் தூண்டிடடா, தமிழா!

2. வழக்கமெனப் பிறன்காலை
வருடுகின்ற வாழ்க்கைமுறை
வரலாற்றை எரித்திடடா, தமிழா ‡நம்மை
முழக்குமாறு முடுக்கிவிட்டு
முழக்குமாறு முடுக்கிவிட்டு
முழுதுமாகச் சுரண்டுவோரின்
முதுகெலும்பை முரித்திடடா, தமிழா!

3. புலப்படுத்த இயலாத
பூட்டகமே இல்லையயனும்
புரட்சிமனம் கொண்டிடடா தமிழா! எதிலும்
கலப்படத்தைச் செய்திடுவோர்
கதைக்கின்ற நயன்மைகளின்
கற்பனையை விண்டிடடா, தமிழா!

4. குலப்பெயரால் மதப்பெயரால்
கூட்டுகின்ற மாநாட்டுக்
கூக்குரலை நாடாதே, தமிழா ‡ நம்மை
பலப்பலவாய்ப் பகுத்துவிட்டுப்
பகற்கொள்ளை யடிப்போரின்
பாசாங்கைப் பாடாதே, தமிழா!

5. பேதமையை எரியவிட்டுப்
பெரும்பொருளைச் சுருட்டுதலைப்
பிறவிப்பே றென்னலாமோ, தமிழா ‡ தெரிந்தும்
தீதைத் தீ தென்னாமல்
திரள்நன்மை என்போரின்
திரைக் கூத்தை நம்பலாமோ, தமிழா!

6. சிந்தியாத முழுமூடச்
செருக்குகளை விட்டொழித்துச்
சீறியயழல் வேண்டுமடா, தமிழா ‡ அதுவே
இந்தியத் தாயயன்போர்
ஏமாற்றுப் பேச்சுகளை
இனங்காணத் தூண்டுமடா, தமிழா!

7. எதுகடமை எதுவுரிமை
எனுந்தெளிவே இல்லாமல்
எச்சிலைக்குப் போராடும் தமிழா ‡வெற்றுப்
பொதுவுடைமைப் பெருமுழக்கும்
பொருளாளன் கைக்கூலி
பொருட்காட்சித் தேராகும் தமிழா!

8.உடனுறையும் தன்னவனை
ஒடுக்கிடுவோன் இந்தியாவின்
ஒருமைப்பண் பாடலாகுமோ? தமிழா ‡வட்டிக்
கடன்நிறையும் தனிக்குடும்பக்
கதறலுக்கு வழிகாணாக்
கட்சிகளைத் தேடலாமோ, தமிழா!

9. வறுமைக்குக் கோடுபோடும்
வாய்ப்பந்தல் போர்முழக்கம்
வளமைக்கு வேலியடா, தமிழா‡உன்றன்
பொறுமைக்குக் கோடுபோடு;
பூணூலர் இந்தியாவின்
பொதுவுடைமை போலியடா, தமிழா!

10. நரித்தனத்தை நிகரமையாய்
நம்பியது போதுமடா,
நாள்குறித்துப் புரட்சிசெய்வாய் தமிழா‡நாட்டை
அரித்தழிக்கும் ஆரியத்தை
அகற்றிவிட்டுப் பொதுவுடைமை
அரசமைக்கத் திரட்சிகொள்வாய், தமிழா!

11. உன்னுரிமைத் தாய்நாட்டை
ஓநாயர் ஆளுதற்கே
ஒப்போலை தேற்றுகின்றாய் தமிழா! இன்றும்
முன்னுரிமை பெரியாரின்
மொய்ம்பளித்த கனியலவா?
முன்பெருமை பீற்றுகின்றாய், தமிழா!

12. ஆரியத்தால் மழுக்கலுற்றாய
ஆங்கலத்ததால் வழுக்கலுற்றாய்
அகடோம்பி வாழுகின்றாய், தமிழா; தமிழ்ச்
சீரியத்தை இகழ்கின்றாய் ‡
பூரியத்தைப் புகழ்கின்றாய்
செக்கிழுத்தே வீழுகின்றாய், தமிழா!

13. ஈழத்தைப் பார்த்தாயா;
ஈசலெனச் சிறகிழந்த
இழிதகைமை ஓர்ந்தாயா, தமிழா‡அங்கு
வாழத்தன் கைகூப்பி
வடிப்பவன்யார் செந்நீரை
வஞ்சகரின் காலடியில், தமிழா?

14. தெருவாயிற் புறத்தொருவன்
திருவோட்டை ஏந்திவந்தால்
திசைமாற்றி வெருட்டுகின்றாய், தமிழா‡உன்றன்
வருவாய்க்குச் சிறுவாய்ப்பு
வாய்கிழித்து மருட்டுகின்றாய், தமிழா!

15. பள்ளியிலா ஊரொன்றைப்
பார்த்திடவே கூடாமல்
பண்படுத்தி வைத்தவர்யார், தமிழா?‡ அந்த
வெள்ளியழைப் பெருந்தாடி
வேந்தரன்றோ, காமராசர்
விளைவிக்க வித்தளித்தார், தமிழா?

16. உலகத்து முதன்மொழியாம்
ஒப்பிலாத் தமிழினிலே
உன்பெயரும் இல்லையடா, தமிழா; நீயோ
பலகற்றாய் யாகிவிட்டாய்ப்‡
பகுத்தாய வில்லையடா, தமிழா!

17. நாளுக்கொரு புதுக்கட்சி;
ஆளுக்கொரு குலப்பிரிவு;
நாற்காலி தேடுகின்றாய், தமிழா‡வானக்
கோளுக்குப் பொய்க்கணியன்
குறிப்புககு மதிப்பளித்துக்
கூப்பாடு போடுகின்றாய், தமிழா!

18. பாலுக்குள் நீரான
பார்ப்பனிய மயக்கத்தால்
பண்பாட்டை இழந்து விட்டாய், தமிழா ‡ மாற்றான்
காலுக்குச் செருப்பானாய்க் ‡
கழுதைக்கு விருப்பானாய்க்‡
கயமைக்கு இருப்பானாய், தமிழா!

19. பார்போற்றும் குறள்தொட்டுப்
பார்த்தறியாக் கண்கொண்டு
பகவத்கீ தை பயிலும், தமிழா‡ஆரூர்த்
தேர்போற்றி இழுத்தவனால்
திசைகெட்டுத் தடுமாறித்
திண்டாடிப் பொய்விற்கும், தமிழா!

20. பேசுதலோ பொதுவுடைமை:
பேணுதலோ பார்ப்பனியம்;
பிழைப்பட்ட பொதுவாழ்க்கை, தமிழா‡ சற்றும்
கூசுதலே இல்லாமல்
கொடுத்தழைப்போர் கட்சிமாறும்
கோதாட்டப் புதுவாழ்க்கை, தமிழா!

21. கொடிபொறித்தே அண்ணாவைக்
கொம்பேற்றிப் பறக்கவிட்டுக்
கோவிலுண்டி உடைக்கின்றாய், தமிழா; நடிப்பு
மடிவிரித்த மலையாளி‡
மயக்குமொழிக் கன்னடத்தி
மட்டகதை படைக்கின்றாய், தமிழா;

22.குமுதத்தைக் குறைசொன்னாய்க்
குங்குமத்தைப் பார்த்தாயா?
குறிக்கோளைத் தெளிந்தாயா, தமிழா! ஒருவன்
அமுதமெனும் பெயராலே
அங்காடி திறந்தானே
அவையயங்கே, தேடினாயோ, தமிழா!

23. பெயர்முன்னே தலைப்பெழுத்தைப்
பிறமொழியில் இடுவதனால்
பெருமைகொண்ட சிற்றறிவுத் தமிழா! வாழ்க்கை
துயர்முன்னே இருந்ததினும்
தொகைமிகுந்து பெருகுதலைத்
தூர்க்காத முற்றறிவுத் தமிழா!

24.திரைப்படத்தைச் -சாறாயத்
தெருக்கூத்தை-வாழ்க்கையின்
தேவையாக்கி நீறாகும் தமிழா! - நாட்டின்
தரைப்படத்தைப் பார்த்ததுண்டா?
தள்ளாட்டத் தலைக்கொழுப்பைத்
தலையயழுத்தாய்க் கூறாதே, தமிழா!

25.திருவோட்டைத் தூக்கியயறி,
திருநாளும் பெருவிழாவும்
தேவையில்லை நிறுத்திவிடு தமிழா!‡தனியாய்
ஒருநாட்டைப் பொதுவுடமைத்
திருநாட்டை அமைத்திடற்கே
ஒருப்படாரை ஒறுத்துவிடு, தமிழா!

26. வெல்வார்க்குத் தாள்வருடி
விலைபோகும் வீடணத்தை
விட்டொழிக்க மாட்டாயா, தமிழா! அறிவுச்
செல்வாக்கைப் பாராட்டிச்
செயல்திறனைச் சீராட்டிச்
செம்மாப்பை ஈட்டாயோ, தமிழா!

27. மனத்துக்குப் பிடித்தவளை
மணக்கின்ற தமிழ்மரபை
மாற்றார்போல் மாற்றலாமோ, தமிழா! மகளிர்
இனத்தையே தாழ்வாக
எண்ணுகின்ற ஆரியத்தை
ஏற்றதெனப் போற்றலாமோ, தமிழா!

28. வறள்பெருமை பேசுகின்றாய்;
வாய்கிழிய வீசுகினறாய்,
வரலாற்றைக் கற்றாயோ, தமிழா!-திருக்
குறள்பெருமை பீற்றிவிட்டுக்
கொள்கைப்பொழி வாற்றிவிட்டு
குடிமானம் விற்றாயே, தமிழா!

29. பாவேந்தர் பெயராலே
பல்கலைக்க ழகமொன்றைப்
பகட்டாக அமைத்தாரே, தமிழா! - அங்குச்
சாவேந்தித் தமிழியக்கம்
சாம்பாராகிப் பறப்பதற்குச்-
சழக்காணை சமைத்தாரே, தமிழா!

30. பொதுவுரிமைப் பொதுவுடைமைப்-
பொன்னாடாய்த் தமிழ்நாட்டைப்
பொலிவித்துக் காட்டிடடா, தமிழா!‡ கேடாம்
மதுவுரிமை மதவுடைமை
மடமைகளை ஒழித்துவிட்டு
மண்ணுரிமை மீட்டிடடா, தமிழா!

31.திரட்சியுறும் தமிழினத்தைத் -
திசைகலங்கித் திரியவிட்டுத்
தென்பாங்குப் பாடுகின்றாய், தமிழா! ‡பெரிய
புரட்சியயனப் புல்லியரின்
புன்மைகளைப் பரப்பிவிட்டுப் -
பொன்விலங்கைப் போடுகிறாய், தமிழா!

32. தீண்டாமை நலமென்னும்
தீயோரை நடமாடும்
தெய்வமென ஏத்துகின்றாய், தமிழா! - நமைப்
பூண்டோடே யழித்திடற்குப்-
பூட்கையுற்றார் கரவுகளைப்-
புரியாமல் கூத்திடுவாய், தமிழா!

33.நீரோட்டத் தேசியத்தார்
நினைவோட்டம் ஆரியரின்
நிழலோட்டம் தெளிவாயோ, தமிழா! - தெளிந்தே
ஈரோட்டுப் பெரியாரின்
இனவூட்ட உணர்வோட்டம்
எழிலூட்டும் களியாயோ, தமிழா!

34. கீதையினை நம்பாதே,
கீரைகளை நம்பிட்டா,
கேடுகளை அவைபோக்கும், தமிழா!-எந்தச்
சீதையுமே கடவுளில்çல்
சிந்தித்தே நவை நீக்கு, தமிழா!

35. போர்ப்பாட்டுப் பாடுகின்றாய்;
புதுப்பரணி எழுதுகின்றாய்;
பொதுவுரிமை ஈட்டினையோ தமிழா!-வெறுவாய்
ஆர்ப்பாட்டம் பயன்தருமோ,
அரிமுழக்கம் செய்முறையோ,
அன்னைநிலம் மீட்டிடடா, தமிழா!

36. கன்னடத்தில் சிங்களத்தில்
கதறுகின்ற உன்னினத்தைக்
காப்பாற்ற முனைந்தாயோ, தமிழா! உன்றன்
நன்னடத்தைப் பேரணியை
நறுநாற்றச் சாராய
நாட்டியமாய்ப் புனைந்தாயே, தமிழா!

37. மூவேந்தர் ஆட்சியயன்றும்
முன்மரபு மாட்சியயன்றும்
முழங்கிவிடல் முடிவாமோ, தமிழா! - என்றும்
நாவேந்தி அலைகின்ற
நாய்போலப் பகைவன்கால்
நக்குதலே விடிவாமோ, தமிழா!

38. ஐயப்பன் பக்தியயன்றும்
ஆதிபரா சக்தி யயன்றும்
அருள்தேடி அழிகின்ற -தமிழா! - ஆளும்
பொய்யப்பன் புனைகின்ற
புது மூகாம் பிகை நாடி,
பொருள்வாரிப் பொழிகின்ற, தமிழா!

39. வட்டிக்குக் கடன்பட்டு
வாங்குகலை முதுபட்டம்
வயிற்றுத்தீ அவித்திடுமோ, தமிழா!‡உடனே
குட்டிக்கொள் பிள்ளையார்முன்;
கோயிலெலாம் வேண்டிக்கொள்
கொணர்ந்துபொருள் குவித்திடுமோ, தமிழா!

40. பாரதத்து நாகரிகப் -
பண்பாட்டைப் பார்ப்பனத்தின்
பாஞ்சாலி பாடட்டும், தமிழா! - என்றும்
ஓரகத்தை ஒருவனுக்கே
உரிமையாக்கும் தமிழச்சி
ஒழுக்கத்தைச் சாடட்டும், தமிழா!

41. கல்தோன்றி மண்தோன்றாக்-
காலத்தே தோன்றியவன்
கதையயல்லாம் போதுமடா, தமிழா! ‡மூடனெனும்
சொல்தோன்றி இனப்புகழைச்-
சுடுநெருப்பாய் எரிக்கையிலே
சுருட்டூம்பல் தீதலவோ, தமிழா!

42. எங்கெங்குத் திரும்பினும்
இனவுரிமைப் போராட்ட
எழச்சிப்பண் கேட்கிலையோ, தமிழா! -உனதின
வெங்கொடுமைத் தளைவாழ்க்கை
விலைபோகும் கலைவாழ்க்கை
விடுதலையை வேட்கிலையே, தமிழா!

43.மனுநெறியைத் தகர்த்தெறியான்
மகநாய கனுமில்லை
மார்க்கியனும் இல்லையடா, தமிழா! அவனே
புனுகுமொழிப் புனைச்சுருட்டன்
புரட்சித்தீ தடுகயவன்
பொன்விலங்குத் தொல்லையடா, தமிழா!

44. எண்ணிப்பார்; எவைசரியோ
ஏற்றுக்கொள்; பிழையாயின்
எடுத்தெறி, நீ; மயங்காதே தமிழா! - ஆய்வைப்
பண்ணிப்பார்; பயன்தெரியின்
பழகிக்கொள்; பகுத்தறிவைப்
பயன்படுத்து; தயங்காதே, தமிழா!

45. ஏசென்பார் வழிகாட்டி;
இசலாத்து வாழ்க்கைமுறை
இந்துமதம் பிணிமாத்தீ, தமிழா! - நீற்றைப்
பூசென்பார், பூசாதே
புராணப்பொய் நம்பாதே
பூணூலை அணியாதே தமிழா!

46. படிப்பதனால் பயனில்லை
பண்பாட்டைப் பழகிக்கொள்
பணத்திமிரில் வேகாதா, தமிழா!- கள்ளைக்
குடிப்பதனால் குழறுதலைக் -
கொள்கையயனக் கொண்டலைந்து
குறிகெட்டுச் சாகாதே, தமிழா!

47. தமிழ்ச்செல்வன் பெயர்புனைந்தாய்,
தமிழினத்தின் தனிப்பண்பைத்
தமிழகத்தை ஊக்காயோ, தமிழா! - அழகாய்த்
தமிழ்ச்செல்வி ஆங்கிலத்தில்
தன்னொப்பம் இடுகின்றாள்;
தமிழச்சி ஆக்காயோ, தமிழா!

48. உறவுக்குக் கைகொடுத்தாய்,
உரிமைக்குக் குரல்கொடுத்தாய்
உற்றதென்ன, ஓர்ந்தாயா, தமிழா? - அன்று
புறவுக்குத் தசையளித்த
புனைகதையை மெய்யயன்று
புகழ்ந்தாய், தேர்ந்தாயா, தமிழா!

49.வரித்தண்டல் இல்லாமல்
வளங்காணும் கொரியாவின்
வரலாற்றைப் படித்தாயா, தமிழா! - உனக்கு
விரித்தென்ன ; தெரித்தென்ன ;
விதி யயன்னும் முழுமூட
விண்முழக்கம் முடித்தாயா, தமிழா?

50. பொழுதுபோக வில்லையயனப்
புலம்புதலைப் பெருமையாக்கிப்
புதுநடிகை ஊக்குகின்ற, தமிழா! - உனைத்
தொழுதுமன் றாடுகின்றேன்,
தொய்வுற்ற தமிழினத்தைத்
தோள்கொடுத்துத் தூக்கிட்டா, தமிழா!